2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தேவதாஸ் சுரேஷ் குமார் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீண்டகால வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று (19) அறிவிக்கப்பட்டது. அதன்படி, இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் எட்டு பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.ஜே.
பிரபாகரன் மரண தண்டனை விதித்தார்.இந்தக் குற்றம் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அப்போதைய செங்கலடி முகாமுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் குழுவொன்று தேவதாஸ் சுரேஷ் குமார் என்பவரை வாகனத்தில் கடத்திச் சென்று கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலம் புதைக்கப்பட்டு அதன் மீது வாழைக்கன்று நடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரால் ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்தையும் பொலிஸார் கண்டுபிடித்திருந்தனர். பின்னர் 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டதுடன், அங்கு நீண்டகாலமாக வழக்கு விசாரணை நடைபெற்றது.
நேற்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பின்படி, ரவி என்ற தர்மலிங்கம் இளமாறன், வீரக்குட்டி சேகர், விஜய் என்ற மகேந்திரராஜா வினோராஜ், ஜெக்கா என்ற யோகராசா ஜெயக்குமார், ஸ்ரீ என்ற ஸ்ரீ ஸ்கந்தராஜா நாகநாதன், சிவா என்ற சொக்கலிங்கம் நாகராசா, அருள் என்ற அருணாச்சலம் இராமச்சந்திரன் மற்றும் விஜி என்ற கோவிந்தன் பிரதீபன் ஆகிய எட்டு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாக இருந்தமைக்கான முதல் குற்றச்சாட்டின் கீழ் ஆறு மாதங்கள் இலகுவான சிறைத்தண்டனையும், மனிதக் கொலை தொடர்பான ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. மேலும், வழக்கில் ஒன்பதாவது பிரதிவாதியை விடுதலை செய்ய மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, அரச சட்டத்தரணிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் டி. தர்ஷிகா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தீர்ப்பின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.