தீவு முழுவதும் நிலவும் மோசமான வானிலை நிலையின் துரதிர்ஷ்டவசமான விளைவாக, பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாலவலான பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியதில், அங்கு வசித்த பதினொரு பேர் உயிரிழந்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, பாதிக்கப்பட்ட முதியோர் இல்லத்தில் இருந்த மேலும் பதினான்கு பேரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.பன்னல, மாக்கந்துர வெல்கம் கிராமப் பகுதியில் அமைந்துள்ள இந்த முதியோர் இல்லம் வெள்ளத்தில் சிக்கியபோது, அங்கு இருபத்தைந்து பேர் தங்கியிருந்தனர். அவர்களில் ஒரு பகுதியினரை காப்பாற்ற முடிந்தாலும், நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததால் மற்றவர்களை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மா ஓயா பெருக்கெடுத்ததால், கிரிஉல்ல மற்றும் மாக்கந்துர உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், கிராமங்களில் ஏராளமானோர் வீடுகளுக்குள்ளும், கூரைகளிலும் சிக்கித் தவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நிவாரணக் குழுவினர் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டதால், சிலர் தனிப்பட்ட படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த துயரச் சம்பவம் குறித்து பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Trending