பேராதனை கறுப்புப் பாலத்தில் சிக்கியிருந்த மரக்கட்டைகளை கடற்படை சுழியோடிகள் அகற்றியுள்ளனர்.
தித்வா சூறாவளியால் பேராதனை கறுப்புப் பாலத்தில் சிக்கியிருந்த மரக்கட்டைகள், மூங்கில் புதர்கள் மற்றும் பிற கழிவுகளை அகற்றி, நீரோட்டத்தை சீரமைக்க இலங்கை கடற்படையின் சுழியோடிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் மற்றும் மூங்கில் புதர்கள் பேராதனை கறுப்புப் பாலம், ரயில்வே பாலம் மற்றும் நில்லம்ப களுக்கமுவ பாலங்களில் சிக்கியதால், நீர் சீராகப் பாய்வதற்கு இடையூறு ஏற்பட்டது. இந்தப் பாலங்களை சீரமைப்பதற்காக கடற்படையின் சுழியோடி உதவி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கடந்த டிசம்பர் 14 மற்றும் 17 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன.
கறுப்புப் பாலம் ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட தடைகளை அகற்றுவதற்காக கடற்படையின் விசேட சுழியோடி குழு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் உதவி வழங்கியதுடன், இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் சுமார் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கறுப்புப் பாலத்தில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் மற்றும் பெரிய மூங்கில் புதர்களை அகற்ற முடிந்தது. இதன் மூலம், நீர் தடையின்றி பாய்வதற்கு வழிவகுத்ததால், ரயில்வே திணைக்களம் எதிர்கால பழுதுபார்ப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும்.
பேராதனை நில்லம்ப பிரதேசத்தில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள களுக்கமுவ பாலத்தில் சிக்கியிருந்த மரக்கட்டைகள் காரணமாக, கட்டம்பேயில் இருந்து நில்லம்பை வரை தேசிய நீர் வழங்கல் சபையின் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் பாதைக்கு சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. கடற்படை டிசம்பர் 11 ஆம் திகதி ஆரம்பித்த விசேட சுழியோடி உதவி நடவடிக்கை டிசம்பர் 14 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதன் மூலம், நீர் குழாய் பாதைக்கு ஏற்படக்கூடிய சேதத்தைத் தவிர்க்க முடிந்தது.
இதற்கிடையில், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை ஆரம்பித்த விசேட மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கையின் கீழ், கடந்த நவம்பர் 22 முதல் டிசம்பர் 18 வரையிலான காலப்பகுதியில் 1378 பேர் மீட்கப்பட்டு, 18301 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக பொது இடங்கள், வீடுகள் மற்றும் குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்யும் திட்டத்தின் கீழ் 1025 நீர் கிணறுகள், 104 பொது இடங்கள் மற்றும் 83 வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.