தரமற்ற மருந்துகளால் மரணம்: மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு எதிராக குற்றவியல் வழக்குகள்!

criminal-cases-filed-against-the-drug-regulatory-authority-for-importing-substandard-drugs-and-causing-deaths

தரமற்ற மருந்துகளின் பயன்பாட்டினால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்கள் மற்றும் தொடர்ச்சியான மருந்து ஒழுங்குபடுத்தல் தோல்விகளை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுடன் தொடர்புடையதாக இந்த பிரச்சினைகள் எழுந்துள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்க அல்லது தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சிவில் உரிமைகள் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சாமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்களுக்கு சுகாதார அமைச்சு மற்றும் அமைச்சர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும், பொறுப்பான அதிகாரிகள் பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், பொதுமக்கள் மருத்துவ ஆலோசனைப்படி மட்டுமே மருந்துகளைப் பெறுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆட்சிக்காலத்தில் இருந்த மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி, தற்போதைய அதிகாரசபை மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களின் அலட்சியமே இந்த நிலைமைக்குக் காரணம் என வைத்தியர் சாமல் சஞ்சீவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) சமர்ப்பித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான பதிவு இல்லாமல் மருந்துகளை இறக்குமதி செய்தல், மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் முன் மற்றும் பின் சீரற்ற மாதிரிகளை பரிசோதிக்காதது, அத்துடன் தடுப்பூசிகளுக்குள் பாக்டீரியாக்கள் நுழைந்த விதம் குறித்து முறையான விசாரணைகளை நடத்தாதது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். மருந்து தரப் பரிசோதனைகளில் தோல்வியடைந்த நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து மருந்துகளைக் கொள்முதல் செய்தல், தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்களின் பலவீனங்கள் மற்றும் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட மருந்துகளை மீண்டும் பயன்படுத்த அறிவுறுத்துதல் போன்ற விடயங்களும் இந்த முறைப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்ணாடித் துண்டுகள் இருந்ததால் முன்னர் முழுமையாகப் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட காலாவதியான ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியை மீண்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மீதான மக்களின் நம்பிக்கையை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும் வைத்தியர் சஞ்சீவ சுட்டிக்காட்டினார். சுகாதார அமைப்பின் சீர்குலைவுகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான அலட்சியம் ஒரு குற்றவியல் குற்றம் என்பதால், முன்னாள் சுகாதார அமைச்சர் உட்பட பலருக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு இணையாக இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கோரினார். மேலும், இந்த சம்பவங்கள் மூலம் ஏற்படக்கூடிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குறித்து விசாரணை கோரி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.




இதற்கிடையில், இந்தியாவின் 'Maan Pharmaceuticals' நிறுவனம் தயாரித்த தடுப்பூசி வகைகளின் விநியோகத்தை உடனடியாக நிறுத்துமாறு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அதன் உள்ளூர் முகவர் நிறுவனமான 'PTC Medical (Pvt) Ltd' இற்கு அவசர சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. மருந்துகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை பத்து வகையான மருந்துகளின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உறுதிப்படுத்தினார். கண்டி தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் நிபுணரின் ஆரம்பகட்ட பரிசோதனைகள் மற்றும் மருந்து பக்கவிளைவுகள், அத்துடன் மரணங்கள் பதிவாகியமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இடர் மதிப்பீட்டு உபகுழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு இடைநிறுத்தப்பட்ட மருந்துகளில் ஒன்டான்செட்ரோன் (Ondansetron), செஃபோடாக்சிம் (Cefotaxime), கோ-அமோக்ஸிக்லாவ் (Co-amoxiclav), ஹாலோபெரிடோல் (Haloperidol), இமிபெனெம் மற்றும் சிலாஸ்டாடின் (Imipenem with Cilastatin), அயர்ன் சுக்ரோஸ் (Iron Sucrose), மெரோபெனெம் (Meropenem), பிபெராசிலின் மற்றும் டெசோபாக்டம் (Piperacillin with Tazobactam) அத்துடன் சல்பாக்க்டம் மற்றும் செஃபோபெராசோன் (Sulbactam with Cefoperazone) ஆகியவை அடங்கும். இந்த மருந்துகள் தனியார் துறையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், தேசிய மருந்து தரப் பாதுகாப்பு ஆய்வகத்தினால் (NMQAL) மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post