கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 14) அறிவிக்கப்படவிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பை பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
41 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதிகளான சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ரசந்த கொடவெல ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டது.
இந்த சம்பவம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி, காலிமுகத்திடலில் அமைதியான போராட்டம் நடைபெற்ற நாளிலோ அல்லது அதற்கு அண்மித்த நாளிலோ பதிவாகியுள்ளது. பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஜயந்த குணவர்தன ஆகியோர் நிட்டம்புவ நகரில் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரால் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.