இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பமாகிறது

twenty20-world-cup-starts-exhibition-in-colombo

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஐ.சி.சி. (ICC) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் உத்தியோகபூர்வ கிண்ணச் சுற்றுப்பயணத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைத்தார்.




இந்தக் கிண்ணம் நேற்று (21) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இலங்கை - இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கு இடையில் அதைப் பார்வையிட விளையாட்டு ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளதால், அந்தப் பிரதேச மக்கள் கிண்ணத்துடன் நினைவுப் புகைப்படங்களை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டித் தொடர், 2012 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை நடத்தும் மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் போட்டியாக வரலாற்றில் இடம்பிடிக்கும்.




சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட போட்டி அட்டவணையின்படி, இலங்கையில் போட்டிகளை நடத்துவதற்காக கொழும்பு ஆர். பிரேமதாச, பல்லேகல சர்வதேச மைதானம் மற்றும் கொழும்பு எஸ்.எஸ்.சி. ஆகிய மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆர். பிரேமதாச மைதானத்தில் 08 போட்டிகளும், பல்லேகல மைதானத்தில் 07 போட்டிகளும், எஸ்.எஸ்.சி. மைதானத்தில் 05 போட்டிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் 20 போட்டிகளுக்கு இலங்கை புரவலராக இருக்கும் என்பதுடன், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறுவது ஒரு சிறப்பம்சமாகும். பாகிஸ்தான் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அந்தப் போட்டிகளுக்கும் இலங்கை புரவலராக இருக்கும், அப்போது இறுதிப் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுவதால், இலங்கையில் நடைபெறும் மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக உயரும்.



இந்தத் தொடரில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற முக்கிய நாடுகளுடன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் தகுதி பெற்றுள்ளன.

வெளிநாட்டு வீரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு ரசிகர்கள் இப்போட்டித் தொடரைக் காண வருவதால், நாட்டின் சுற்றுலாத் துறையில் பெரும் எழுச்சியும், அந்நியச் செலாவணி வருவாயில் உயர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுவதும், விளையாட்டு சுற்றுலாத் தலமாக இலங்கையின் நற்பெயர் உலகளவில் பரவுவதும் இந்த புரவலர் உரிமையின் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும்.

கிண்ணத்தை வெளியிடும் இந்த விசேட நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் கமகே, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, இருபதுக்கு 20 அணித் தலைவர் தசுன் ஷானக மற்றும் பிரதம பயிற்சியாளர் சனத் ஜயசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

twenty20-world-cup-starts-exhibition-in-colombo

twenty20-world-cup-starts-exhibition-in-colombo

twenty20-world-cup-starts-exhibition-in-colombo

twenty20-world-cup-starts-exhibition-in-colombo

Post a Comment

Previous Post Next Post