பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (29) இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நாமல் ராஜபக்ஷ உட்பட நால்வர் சந்தேக நபர்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அதன்படி, நீதவான் வழக்கை மீண்டும் ஜூலை 30ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் நிலைப்பாடு குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் பணித்தார்.
இந்த விசாரணை 2016ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. நாமல் ராஜபக்ஷ ஒரு நிறுவனத்தை நடத்தி, பாராளுமன்ற உறுப்பினராக முறையற்ற விதத்தில் சம்பாதித்த பணத்தை பணமோசடி செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளார் என அந்த முறைப்பாடு குற்றம் சாட்டுகிறது.