கம்பீரமான 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் 2026 பெப்ரவரி 04 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளுடன் இணைந்து நடத்தப்படும் ஒத்திகை நிகழ்ச்சிகள் மற்றும் பிரதான நிகழ்வு தினத்தை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் மாற்றுப் பாதைகள் பயன்பாடு தொடர்பான விசேட போக்குவரத்துத் திட்டம் பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்துத் திட்டத்தின்படி, 2026 ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 02 ஆகிய திகதிகளில் ஒத்திகை பயிற்சிகளுக்காக காலை 07.45 மணி முதல் பி.ப 01.30 மணி வரையிலும், முழு ஒத்திகை நடைபெறும் பெப்ரவரி 01 ஆம் திகதி காலை 05.00 மணி முதல் பி.ப 01.30 மணி வரையிலும் குறித்த வீதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும். அத்துடன், தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறும் பெப்ரவரி 04 ஆம் திகதி காலை 05.00 மணி முதல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை சந்தர்ப்பத்திற்கேற்ப இந்த வீதி கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.
ஒத்திகைகள் நடைபெறும் காலப்பகுதிகளில் சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர வீதிக்குள் நுழைவதற்கும், ஸ்டான்லி விஜேசுந்தர வீதி வழியாக பவுண்டேஷன் நிறுவனத்தை நோக்கிச் செல்வதற்கும், பௌத்தாலோக மாவத்தையில் உள்ள டொரிங்டன் சந்தியிலிருந்து பிரேமகீர்த்தி டி அல்விஸ் வீதிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ஆர்.எஃப்.பி. சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸுக்கும், விஜேராம மாவத்தையில் உள்ள வித்யா மாவத்தை சந்தியிலிருந்து வித்யா மாவத்தைக்கும் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், மெய்ட்லண்ட் கிரசென்ட் - ஆர்.ஜி. சேனாநாயக்க மாவத்தை சந்தி, சுதந்திர சுற்றுவட்டம் மற்றும் ஹோர்ட்டன் பிளேஸ் - மெய்ட்லண்ட் கிரசென்ட் சந்தியிலிருந்து சுதந்திர சுற்றுவட்டத்தை நோக்கி வாகனங்கள் நுழைவதும் இக்காலப்பகுதியில் கட்டுப்படுத்தப்படும்.
சுதந்திர தின பிரதான நிகழ்வுகள் நடைபெறும் பெப்ரவரி 04 ஆம் திகதி அதிகாலை 03.00 மணி முதல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை விரிவான போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும். ஒத்திகை நாட்களில் மூடப்படும் வீதிகளுக்கு மேலதிகமாக, ஹோர்ட்டன் சுற்றுவட்டம் மற்றும் நூலக சந்தியிலிருந்து ஆனந்த குமாரசுவாமி வீதிக்குள் நுழைவது கட்டுப்படுத்தப்படும். மேலும், தர்மபால மாவத்தை மற்றும் கண்ணங்கரா மாவத்தையிலிருந்து எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தைக்குள் நுழைவதையும் இக்காலப்பகுதியில் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் இக்காலப்பகுதிகளில் குறித்த வீதிகளில் வசிப்பவர்களுக்கும், அப்பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு கடமைக்குச் செல்பவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களையும் சாரதிகளையும் கேட்டுக்கொள்கின்றனர்.