நான் தவறு செய்திருந்தால், எவரும் நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்று சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க நேற்று (21) கொழும்பில் தெரிவித்தார். தான் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்றும், நீதிமன்றம் மூலம் வரும் எந்தவொரு முடிவுக்கும் இணங்கத் தயாராக இருப்பதாகவும் சட்டமா அதிபர் கூறினார். சட்டத்தரணிகள் குழுவிடம் சட்டமா அதிபர் இதனைக் கூறினார்.
“நானும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல என்பதை சட்டம் தெரிந்தவர்கள் என்ற முறையில் நீங்கள் அறிவீர்கள். நான் தவறு செய்திருந்தால், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளன. தயவுசெய்து அந்த இடங்களுக்குச் சென்று எனது முடிவுகளை சவால் செய்யுங்கள். நீதிமன்றம் மூலம் வரும் முடிவுக்கு இணங்க நான் தயாராக இருக்கிறேன்” என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஒரு குழுவினர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவினர் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு அவர்கள் எதிர்ப்புப் பலகைகளையும் பதாகைகளையும் காட்சிப்படுத்தி அமைதியாகத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதற்கு எதிராக சட்டமா அதிபருக்கு ஆதரவு தெரிவித்து ஒரு குழு சட்டத்தரணிகள் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் செயற்பட்டனர். சட்டமா அதிபரின் சுதந்திரத்தைப் பாதுகாப்போம், நீதித்துறைச் செயற்பாடுகளுக்கு ஏற்படும் அழுத்தங்களைக் கண்டிப்போம் என்ற தலைப்பில் அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒரு செய்தியையும் கையளித்தனர்.