ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்கள் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடுகள் தொடர்பில், அவர் கைது செய்யப்பட மாட்டார் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். மேலும், அவருக்கு எதிராக வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும் சட்டமா அதிபர் அங்கு மேலும் வலியுறுத்தினார்.
கொழும்பு கோட்டை மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த முறைப்பாடுகளை சவால் செய்து ஷானி அபேசேகர தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இந்த விடயங்களை வெளிப்படுத்தினர். இந்த மனுக்கள் மீதான விசாரணை பிரீதிபத்மன் சூரசேன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெற்றது.
இங்கு சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன சில்வா மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சம்பத் பண்டார ஆகியோர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததாவது, சம்பந்தப்பட்ட சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணையை நடத்தியுள்ளது. அந்த விசாரணைகளின்படி அபேசேகரவுக்கு எதிராக வழக்குத் தொடர போதுமான தகவல்கள் வெளிவரவில்லை என்பதால் அவரை கைது செய்ய எந்தத் திட்டமும் இல்லை என அரசாங்க சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள முறைப்பாட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதி வழங்கியது. இருப்பினும், குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டதால், அதற்கு தொடர்பான அடிப்படை உரிமை மனுவை அபேசேகர வாபஸ் பெற்றார்.
மனுதாரர் தரப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமரப்பெருமா மற்றும் சலிய பீரிஸ் ஆகியோருடன் சட்டத்தரணி தனுக்க நந்தசிறி ஆஜரானார், சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சம்பத் பண்டார மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா ஆகியோர் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தனர்.