இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் போட்டி நிர்ணயம் செய்வதற்காக வீரர்களைப் பாதித்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட தம்புள்ளை தண்டரிஸ் அணியின் இணை உரிமையாளரான பங்களாதேஷ் வர்த்தகருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ ரணதுங்க நேற்று (28) இரண்டரை கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.
குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட சுமார் 2 1/2 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால், ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, மேலும் 04 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைக்கவும் உத்தரவிட்டார். விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் இணை உரிமையாளரும் பிரித்தானிய குடியுரிமை பெற்ற பங்களாதேஷ் வர்த்தகருமான தமீம் ரஹ்மான் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தம்புள்ளையில் முஜிபூர் உர் ரெஹ்மான், பிலால் ஹுசைன், இக்பால் ஜாவேத் மற்றும் முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்படாத மேலும் சிலருடன் இணைந்து இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முடிவை மாற்றுவதற்காக அல்லது தமக்கு சாதகமான முடிவுகளைப் பெறுவதற்காக தம்புள்ளை தண்டர்ஸ் கிரிக்கெட் அணியின் பணிப்பாளரான சந்திம சஸ்ரீக பீரிஸ் புஸ்ஸேகொட என்பவருக்கு ‘தமக்கு வசப்படுத்தக்கூடிய வீரர்களைத் தேடுங்கள்’ என அறிவுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார் .
2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் 05 (அ), 09 மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 102 மற்றும் 113 ஆம் பிரிவுகளின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் இணை உரிமையாளரும் பிரித்தானிய குடியுரிமை பெற்ற பங்களாதேஷ் வர்த்தகருமான தமீம் ரஹ்மான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, தனது கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக அறிவித்து, குற்றத்தை ஒப்புக்கொள்வது குறித்து பிரதிவாதிக்கு விளக்கமளித்து, அவரிடமிருந்து பெறப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியுடன் கூடிய சத்தியக் கடதாசியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சம்பவம் தொடர்பான விளையாட்டு குற்றத் தடுப்பு சிறப்புப் பொலிஸ் பிரிவின் விசாரணைகளுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்திய விசாரணைகளுக்கும் தனது கட்சிக்காரர் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், சுமார் ஒன்றரை வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, தனது கட்சிக்காரர் மீண்டும் சமூகத்தில் இணையக்கூடிய வகையில் தண்டனை விதிக்குமாறு கோரினார்.
முறைப்பாடு சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி அகிலா தல்பதாது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு பொருத்தமான தண்டனை விதிக்குமாறு கோரினார். ஒரு குற்றச்சாட்டுக்கு 12 மில்லியன் ரூபாய் வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 24 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அபராதத் தொகையை செலுத்துவதற்காக வழக்கை பெப்ரவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கவும் உத்தரவிட்டார்.
அதற்கு மேலதிகமாக, ஒரு குற்றச்சாட்டுக்கு 02 வருடங்கள் வீதம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 04 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட விளையாட்டு ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான சானக சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அப்பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான சுபுல் விதானகே ஆஜரானார்.