கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படிகாரமடுவ, நுவரகாம் பிரதேசத்தில் இன்று (06) அதிகாலை ஒரு சோகமான குடும்ப தகராறின் முடிவு பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு முற்றியதால், ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அவரும் அவரது 13 வயது இளைய மகளும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் நால்வர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த குற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்தில் சிக்கி, வீட்டின் தலைவரான 43 வயது தந்தை மற்றும் அவரது 13 வயது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான 36 வயது தாய், 15 வயது மூத்த மகள் மற்றும் 66 வயது பாட்டி ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ வைக்கப்பட்ட நேரத்தில், குடும்பத்தின் 20 வயது மகன் வீட்டில் இருக்கவில்லை. இருப்பினும், தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தீயில் எரிந்து கொண்டிருந்த தனது தாயையும் சகோதரிகளையும் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்தபோது, அந்த இளைஞனும் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், தீ வைத்த நபர் தொடர்ந்து மது அருந்தி தனது மனைவியுடன் சண்டையிடுபவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த குடும்ப தகராறுகள் தொடர்பாக இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அத்தகைய சந்தர்ப்பங்களில் பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர் என்றும் மேலதிகமாக தெரியவந்துள்ளது.