கல்கிசை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஹன்சமாலி என்ற பெண் தப்பிச் சென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மூன்று பொலிஸ் அதிகாரிகளை இடைநிறுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு கடமையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்கள் அன்றைய தினம் இரவு கடமையில் இருந்த ஒரு சார்ஜன்ட், துணை ஊழியராகப் பணியாற்றிய ஒரு சார்ஜன்ட் மற்றும் சந்தேகநபருக்குப் பாதுகாப்பு வழங்கிய ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவர்.
இந்தத் தப்பித்தல் சம்பவம் கடந்த 16ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அப்போது சந்தேகநபர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய தேவை இருப்பதாகக் கூறி ஒரு பெண் கான்ஸ்டபிளுடன் வெளியே வந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பித்து அருகிலுள்ள வீதியில் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், தப்பிச் சென்ற சந்தேகநபரான பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக உடனடியாகச் செயற்பட்ட ஒரு விசேட பொலிஸ் குழு, சுமார் எட்டு மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு அன்றைய தினமே தலவத்துகொட, கிம்புலாவல பிரதேசத்தில் அவரை மீண்டும் பொலிஸ் காவலில் எடுக்க முடிந்தது. அவர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேகநபர் முதலில் மொரட்டுவ பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் அமைந்துள்ள விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளின் குழுவினரால் கைது செய்யப்பட்டவர் ஆவார். ரத்மலானை, மாலிபன் சந்திக்கு அருகிலுள்ள அத்திடிய பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவரிடமிருந்து 36,650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.