பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்கு அருகில் நேற்று (02) பகல் திடீரென ஏற்பட்ட குளவித் தாக்குதலுக்கு உள்ளான சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக பல்கலைக்கழக மாணவ மாணவிகள் உட்பட எட்டு பேர் உடனடியாக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஆறு மாணவ மாணவிகளும், பல்கலைக்கழக ஊழியர்கள் இருவர் அடங்குவதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கலைப்பீடத்திற்கு அருகில் அமைந்துள்ள பால்பார் (Milk Bar) முன்பாக இந்த நபர்கள் பகல் நேரத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இருப்பினும், இந்தத் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் எந்தவொரு குளவிக் கூடுகளும் வெளிப்படையாகத் தென்படவில்லை என இது தொடர்பாக விசாரித்தபோது பல்கலைக்கழகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும், குறித்த பிரதேசத்தில் குளவிக் கூடுகளைக் காண முடியவில்லை என அங்கு இருந்த மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அக்பர் பாலம் அமைந்துள்ள பகுதியில் பல குளவிக் கூடுகள் தொடர்ந்து காணப்படும் இடமாகும். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்கு சுமார் ஒரு வார காலம் இருக்கும்போது நிர்வாகம் தலையிட்டு அந்தக் குளவிக் கூடுகளை அகற்றுவது ஒரு வழக்கமான செயல்முறையாகும்.