மாதாந்தம் செயற்படும் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய பெப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை திருத்தம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும், அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா வெள்ளை டீசல் விலைகள் மாத்திரம் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய விலை திருத்தத்திற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையும், லங்கா வெள்ளை டீசல் லீட்டர் ஒன்றின் விலையும் தலா 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதற்கு முன்னர் 294 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 292 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், 279 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட லங்கா வெள்ளை டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 277 ரூபாவாக இருக்கும்.
இந்த இரண்டு வகைகளைத் தவிர ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகள் மாறாமல் இருக்கும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா சுப்பர் டீசல், லங்கா மண்ணெண்ணெய் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஆகிய எரிபொருள் வகைகள் தற்போதுள்ள பழைய விலைகளிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.