தெஹிவளை மற்றும் கொஹுவளை பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு கொலைகள் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் மேல் மாகாண தென் பிராந்திய குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 09ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அதன் உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும், கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி கொஹுவளை பொலிஸ் பிரிவின் போதியாவத்த பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கும் உதவி ஒத்தாசை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்கள் பொரலஸ்கமுவ மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த, 18 வயதுடைய இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்து 14 கிராம் 730 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த குற்றங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தென் பிராந்திய குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.