மோடியின் அழைப்பின் பேரில் அநுர இந்தியாவில் AI மாநாட்டிற்கு

anura-to-an-ai-conference-in-india-at-modis-invitation

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை புதுடெல்லியில் நடைபெறவுள்ள 2026 இந்தியா-செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் (India–AI Impact Summit 2026) கலந்துகொள்ளவுள்ளார்.




இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்படும் இந்த சர்வதேச மாநாடு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச ஒத்துழைப்புக்கான இந்தியாவின் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்தி 'மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம்' ஆகிய மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் செயற்படுத்தப்படும்.

நிலையான மற்றும் பங்கேற்பு வளர்ச்சியை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலப் பங்கு குறித்து விரிவாக விவாதிப்பதற்காக உலகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் துறையின் நிபுணர்கள் பலர் இந்த உயர்மட்ட மேடையில் ஒன்றுகூடுவார்கள்.




இந்த மாநாட்டில் சுமார் 20 உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். ஜனாதிபதி திசாநாயக்கவுடன், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக், ஸ்லோவாக்கிய ஜனாதிபதி பீட்டர் பெலெக்ரினி, சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கை பார்மலின், நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் காலித் பின் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் ஆகிய இராஜதந்திரிகளும் இதில் கலந்துகொள்வார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களைத் தவிர, 45க்கும் மேற்பட்ட நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்க்கப்படுகிறார்கள்.



செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்குதல், பொறுப்புணர்வுடன் கூடிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் உலகெங்கிலும் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும்.

Post a Comment

Previous Post Next Post