ரட்டா மற்றும் மனுவர்ணவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு

court-orders-to-arrest-ratta-and-manuvarna

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்காக ஆஜராகாத காரணத்தினால், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் ரதிந்து சேனாநாயக்க என்ற 'ரட்டா' ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நேற்று பிடியாணை பிறப்பித்தார். கொம்பனித்தெரு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது சந்தேகநபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.




2022 ஜூலை மாதம் 25 ஆம் திகதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என கோரி கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. வழக்கு அழைக்கப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினரும் ரதிந்து சேனாநாயக்கவும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கவும், அவர்களின் பிணைதாரர்களுக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதவான் நடவடிக்கை எடுத்தார்.

இதற்கிடையில், கடந்த வழக்கு தினத்தில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வராத தேனே ஞானானந்த தேரர் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, அவரை ஒரு லட்சம் ரூபாய் மேலதிக பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.




எவ்வாறாயினும், இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின், தம்மிக முனசிங்க, தெம்பிட்டியை சுகதானந்த தேரர் மற்றும் சத்தியவேல் அடிகளார் உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்கள் நேற்று வழக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணி திலின வீரசிங்க நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார்.

Post a Comment

Previous Post Next Post