
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக விமானப் போக்குவரத்து மற்றும் அன்றாட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரையிலான காலப்பகுதியில் மட்டும் 11,055 இற்கும் அதிகமான விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஃப்ளைட்அவேர்' (FlightAware) விமானப் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனத்தின்படி, திங்கட்கிழமை அன்று மட்டும் 5,600 முதல் 5,700 வரையிலான விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்த விமானப் போக்குவரத்தில் சுமார் இருபது சதவீதமாகும். மேலும், இந்த மோசமான வானிலை காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளின் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், திங்கட்கிழமை மாலை வரையிலும் 519,232 வீடுகளும் அலுவலகங்களும் மின்சாரம் இன்றி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் கடுமையான பனிப்பொழிவின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்றால், 153 வருட வரலாற்றில் முதன்முறையாக 'தி பாஸ்டன் குளோப்' (The Boston Globe) பத்திரிகை அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் அச்சகத்திற்கு வர முடியாததே இதற்குக் காரணம். தேசிய வானிலை சேவை அறிக்கையின்படி, ரோட் தீவு மற்றும் மாசசூசெட்ஸ் மாநிலங்களின் சில பகுதிகளில் சுமார் 37 அங்குல பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும், நியூயோர்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடையில் சுமார் 20 அங்குல பனிப்பொழிவும், லாங் தீவின் இஸ்லிப் பகுதியில் 22 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, ரோட் தீவின் ப்ரோவிடன்ஸ் பகுதியில் பதிவான 32.8 அங்குல பனிப்பொழிவு, 1978 இல் பதிவான 28.6 அங்குல பழைய சாதனையை முறியடித்துள்ளது.
நிலைமை மிகவும் மோசமடைந்ததையடுத்து, பல மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரில் பாடசாலைகள், வீதிகள், பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பின்னர் நிலைமை சீரடைந்ததும் செவ்வாய்க்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என மேயர் ஜொஹ்ரான் மம்டானி அறிவித்தார். மாசசூசெட்ஸ் ஆளுநர் மோரா ஹீலி சில பகுதிகளுக்கு பயணத் தடைகளை விதித்து, மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ரோட் தீவு ஆளுநர் டான் மெக்கீ மாநிலம் முழுவதும் பயணத் தடையை விதித்தார். நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் மாநிலம் முழுவதும் அவசரகால நிலையை அறிவித்து, தேசிய பாதுகாப்புப் படையினரையும் தயார் நிலையில் வைத்துள்ளார். இந்த நிலைமை பயணிகள் போக்குவரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. நியூயோர்க் மற்றும் பாஸ்டன் இடையேயான ரயில் சேவை திங்கட்கிழமை இரவு வரை இடைநிறுத்தப்பட்டதுடன், பிராட்வேயில் உள்ள அனைத்து நாடகக் காட்சிகளும் ஞாயிற்றுக்கிழமை மாலை இரத்துச் செய்யப்பட்டன.
வானிலை ஆய்வாளர்கள் இது கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த 'நோர்ஈஸ்டர்' (Nor'easter) புயல் என்று சுட்டிக்காட்டுகின்றனர். சில பகுதிகளில் மணிக்கு 2 முதல் 3 அங்குல பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 110 மைல்கள் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை பாதிக்கும் இந்த 'நோர்ஈஸ்டர்' புயல் நிலைமை, கனடாவிலிருந்து வீசும் அதிக குளிர்ச்சியான காற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மேலே எழும் ஒப்பீட்டளவில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்றும் ஒன்றோடொன்று மோதும்போது உருவாகிறது. கடல் நீரில் உள்ள வெப்பமான தன்மை காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, அது குளிர்ந்த காற்றுடன் கலக்கும்போது அதிக பனிப்பொழிவாக மாறுகிறது. மேலும், 'ஜெட் ஸ்ட்ரீம்' (Jet Stream) என்று அழைக்கப்படும் மேல் வளிமண்டலத்தில் வேகமாக வீசும் காற்றும் இந்த வானிலை அமைப்பை மேலும் வலுப்படுத்த பங்களிக்கிறது.
