போராட்டக் காலத்தில் விதிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம், ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக தான் ஆஜராக மாட்டேன் என சட்டமா அதிபர் நேற்று (24) உயர் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ரசிக ஜயக்கொடி உள்ளிட்ட குழுவினரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பலரும் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுக்கள் பரிசீலிக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சவித் பண்டார, போராட்டக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட இந்த கட்டுப்பாடுகள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் நிலைப்பாட்டை சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அதற்கான அனுமதியை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அச்சமயத்தில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இதற்கு முன்னர் இதேபோன்ற ஒரு மனுவை பரிசீலித்த நீதிமன்றம், போராட்டக் காலத்தில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த மனுக்கள் தொடர்பாகவும் இதேபோன்ற உத்தரவை பிறப்பிக்குமாறு அவர்கள் நீதிபதிகள் குழாமிடம் கோரினர்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், சிரேஷ்ட அரச சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்று அதற்கு அனுமதி வழங்கியதுடன், குறித்த மனுக்களை மீண்டும் மே மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன், சுரேஷ் பெர்னாண்டோ ஆகியோர் ஆஜராகினர். பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி சவித் பண்டார ஆஜரானார்.