கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் எத்கால, நாகொல்ல பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி மாலை இடம்பெற்ற கோர விபத்தில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஸ்ஸங்க நந்தன குலதுங்கவின் மூன்று வயது மகள் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி மற்றும் ஏழு வயது மகன் காயமடைந்து கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கம்பளை, உனம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த குலதுங்க முதியன்சேலாகே அபிஷா நிஷாரா கெனுலி குலதுங்க என்ற மூன்று வயது மூன்று மாத சிறுமி என எத்கால பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுமி தனது தாயுடனும், ஏழு வயது சகோதரனுடனும், முன்பள்ளி ஆசிரியரின் கம்பளை, மாவத்துர பிரதேசத்தில் உள்ள வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் வந்த மோட்டார் காரொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த மூவரும் உடனடியாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் மகள் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான திடீர் மரண விசாரணை கம்பளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நலின் ஏ. மெதிவக்கவினால் நடத்தப்பட்டதுடன், பிரேத பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி சச்சிந்த ரணதுங்கவினால் மேற்கொள்ளப்பட்டது. விசாரணைகளில் சிறுமி மோட்டார் சைக்கிளின் முன் ஆசனத்தில் பயணித்தமை தெரியவந்துள்ளது.
சிறுமிக்கு மார்புப் பகுதியில் ஏற்பட்ட அடியினால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பாரிய காயங்களினால் மரணம் ஏற்பட்டதாகவும் சட்ட வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளார். மரண விசாரணையின்போது சிறுமியின் தந்தை நிஸ்ஸங்க நந்தன குலதுங்க மற்றும் தாய் திலுக்கா சாமலி குமாரி ஹேரத் ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட எத்கால பொலிஸார், மோட்டார் காரின் சாரதியை கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, கம்பளை நீதவான் சரசி பரணமானவினால் அவர் இன்று (23) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.