ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தொண்ணூறு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பெற்றுள்ளனர். கடந்த 25ஆம் திகதி காலை பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து இரகசியப் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அவரை இவ்வாறு தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே, 1987 மார்ச் 16 அன்று இலங்கை இராணுவத்தில் இணைந்தார். 2019 டிசம்பர் முதல் நாட்டின் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராகப் பணியாற்றினார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் அதனை நிராகரித்தார். இதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அவரை அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அவரது இந்த கைதுக்கு அடிப்படையாக அமைந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் 2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்டது. இதில் தீவு முழுவதும் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர்.