போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் அதிமேதகு டாக்டர் சையதினா முஃபத்தல் சைஃபுதீன் சாஹிப் அவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் நேற்று (10) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஒரு விசேட சந்திப்பு நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ள பத்து இலட்சத்திற்கும் அதிகமான போரா சமூகத்திற்கு தலைமை தாங்கும் சைஃபுதீன் சாஹிப் அவர்களின் இந்த வருகை ஒரு முக்கிய நிகழ்வாகக் குறிக்கப்பட்டது.
ஜனாதிபதியுடன் மிகவும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட போரா ஆன்மீகத் தலைவர், இலங்கையில் புதிய சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்தைப் பாராட்டினார். குறிப்பாக, நாட்டை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும், மோசடி மற்றும் ஊழலை அகற்றுவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள விரிவான நடவடிக்கைகள் அவரது பாராட்டைப் பெற்றன. அத்துடன், அந்த முயற்சிகள் வெற்றியடைய தனது ஆசீர்வாதத்தையும் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் போரா சமூகத்திற்கும் ஏனைய சமூகப் பிரிவினருக்கும் இடையிலான பரஸ்பர உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாக இங்கு நினைவுகூரப்பட்டது. அத்துடன், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு போரா சமூகம் வழங்கும் சிறப்பான பங்களிப்பு குறித்தும் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரின் இந்த இலங்கை விஜயத்திற்காக தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் போரா சமூகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.