அரசாங்கம் நாட்டின் சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது - ரணில்

the-government-has-started-a-program-to-scare-the-countrys-lawyers---ranil

நாட்டின் பல கட்சி ஜனநாயக முறைமை பாரிய ஆபத்தில் உள்ளதால், அதனைப் பாதுகாப்பதற்காக தனது முழு ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் பல அரசியல் கட்சிகள் இணைந்து புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட "ஹண்ட" அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (25) கொழும்பு, மல் வீதியில் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றதுடன், அங்கு அவர் இதனை வலியுறுத்தினார்.

சட்டத்தரணிகள் சமூகத்தை அச்சுறுத்துவதற்கும், வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் திட்டத்தை தோற்கடிப்பதற்கும் முழு எதிர்க்கட்சியும் ஒரே அணியில் ஒன்றிணைவதன் அவசியத்தையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.




அங்கு மேலும் கருத்து தெரிவித்த திரு. விக்கிரமசிங்க, பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதும், ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்படுவதும் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்று சுட்டிக்காட்டினார். 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்து, சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் புதிய எழுச்சியை உருவாக்க அனைவரும் பாடுபட்டுள்ளதாகவும், அந்த ஜனநாயக சுதந்திரத்தின் பலன்களை இலங்கையும் இந்தியாவும் அனுபவித்து வருவதாகவும் அவர் நினைவுபடுத்தினார். எந்த அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், பொருளாதாரம், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள், கல்வி மற்றும் பல கட்சி முறைமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கத்துடன் கடமைப்பட்டுள்ளனர் என்றும் முன்னாள் ஜனாதிபதி விளக்கினார்.

சமூக ஊடகங்கள் ஊடாக மகா சங்கத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் மற்றும் சட்டத்தரணிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறை தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். அண்மையில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகளில் சிக்கவைக்கும் முயற்சிகள் இங்கு அவரது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் செயற்பாடுகளை முடக்கி, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பாதிக்கும் இவ்வாறான முயற்சிகளை தோற்கடிப்பதற்கு தன்னுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் முழு ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.




"நாட்டில் சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் ஒரு திட்டத்தை நாம் தற்போது காண்கிறோம். அதேபோல், சமூக ஊடகங்களில் ஒரு குழுவினர் சங்கத்தினருக்கு எதிராக ஒரு பெரிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாம் இவை அனைத்தையும் எதிர்க்க வேண்டும். எதிர்ப்பது மட்டுமல்லாமல், மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். சட்டத்தரணியும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை குறித்து நாம் தொடர்ந்து விவாதித்தோம். நாம் அனைவரையும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகளில் சிக்கவைக்க முயற்சிக்கிறார்கள். இது கட்சிகளின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான ஒரு முயற்சி. அத்துடன், சமூக ஊடகங்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முயற்சி. நீதிமன்ற சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை அழிப்பதாகும். இதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். உங்களுடன் இணைந்து அந்தப் பணிகளைச் செய்ய எனது மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முழு ஆதரவையும் வழங்குகிறேன்."

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தமது கட்சி அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு, நாட்டின் தேசிய நெருக்கடிகளின் போது எதிர்க்கட்சிகள் ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார். வீதிகளில் நடைபெறும் கொலைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை தொடர்ச்சியாக சிறைப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஜனநாயக கலாச்சாரத்திற்கு பாரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். முன்னாள் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்ஷன யாப்பா, உதய கம்மன்பில, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, பிரேமநாத் சி. தொலவத்த, ஜயந்த விஜேசிங்க, சுகீஷ்வர பண்டார ஆகியோரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Post a Comment

Previous Post Next Post