சீனாவின் கெப்பிட்டல் விமான சேவை, பெய்ஜிங் டாக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு புதிய விமான சேவைகளை ஆரம்பித்து, தனது கன்னி விமானத்தை நேற்று (31) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
இந்த கன்னி விமானப் பயணத்திற்காக ஒரு A-330 ஏர்பஸ் விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், அது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது பாரம்பரிய நீர் அஞ்சலியுடன் வரவேற்கப்பட்டது.
நேற்று (31) பிற்பகல் 1.46 மணிக்கு பெய்ஜிங்கிலிருந்து வந்த கெப்பிட்டல் விமான சேவையின் JD-487 என்ற இந்த கன்னி விமானத்தில் 170 பயணிகளும் 13 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
இந்த புதிய விமான சேவை வாரத்திற்கு இருமுறை, ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயக்கப்பட உள்ளது. விமானம் பிற்பகல் 2.20 மணிக்கு கட்டுநாயக்காவை வந்தடைந்து, அதே நாளில் பிற்பகல் 4.20 மணிக்கு பெய்ஜிங் நோக்கி புறப்படும். இந்த விமானப் பயணத்திற்கு எட்டு மணிநேரம் ஆகும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க விமானப் பயணத்தை வரவேற்க இலங்கையின் சீன துணைத் தூதுவர் ஷூ யங்வெய்ங் (Xu Yangweiing) அவர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தின் முகாமைத்துவத் தலைவர் அருண ராஜபக்ஷ அவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.