2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவின் தலையீட்டுடன் இஸ்ரேலால் ஈரானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் தமது சிவில் விமானப் பயணங்களுக்கான வான்வெளிகளை தற்காலிகமாக மூடியுள்ளன. இந்த முடிவின் காரணமாக விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுதல், விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படுதல் மற்றும் புதிய பயணப் பாதைகள் அறிமுகப்படுத்தப்படுதல் என்பவற்றால் உலகெங்கிலும் உள்ள விமானப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஈரானின் தெஹ்ரான் போன்ற நகரங்களை மையமாகக் கொண்ட விமானச் சேவைகள் கிட்டத்தட்ட முழுமையாக ஸ்தம்பித்துள்ளன. அத்துடன், துபாய், தோஹா மற்றும் அபுதாபி போன்ற வளைகுடாப் பிராந்தியத்தின் முக்கிய விமான நிலையங்கள் வழியாக ஐரோப்பா மற்றும் ஆசியா இடையே கிழக்கு-மேற்கு வழித்தடங்களில் பயணிக்கும் விமானங்களுக்கு நீண்ட பயணப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் பெரும் கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த நெருக்கடியான சூழ்நிலையில், லுஃப்தான்சா நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களான ஆஸ்திரியன் மற்றும் சுவிஸ் விமான சேவைகளும் டெல் அவிவ் மற்றும் பெய்ரூட் உள்ளிட்ட பல இடங்களுக்கான அனைத்து விமானப் பயணங்களையும் மார்ச் 7 ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளன. அத்துடன், விஸ் ஏர் (Wizz Air) நிறுவனமும் மார்ச் 7 ஆம் திகதி வரை இஸ்ரேல், துபாய், அபுதாபி மற்றும் அம்மான் ஆகிய இடங்களுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்தியுள்ளது. அமெரிக்க விமான சேவைகளான யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானங்களை ஏதென்ஸ் போன்ற வேறு நகரங்களுக்குத் திருப்பி விட்டுள்ளன. ஏர் பிரான்ஸ், கே.எல்.எம் மற்றும் ஏஜியன் ஆகிய விமான நிறுவனங்களும் டெல் அவிவ்வுக்கான சேவைகளை முழுமையாக நிறுத்தியுள்ளன. ரஷ்ய போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் அந்நாட்டு விமான நிறுவனங்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
பிராந்திய மற்றும் ஆசிய விமான சேவைகள் பலவும் இந்த நிலைமைக்கு விரைவாகப் பதிலளித்துள்ளன. ஏர் இந்தியா (Air India) நிறுவனம் புதுதில்லியிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தை மீண்டும் மும்பைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது. அத்துடன், மார்ச் 1 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு இஸ்ரேலுக்கான விமானப் பயணங்களை இடைநிறுத்தவும், வட அமெரிக்கப் பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்கள் ஐரோப்பாவில் எரிபொருள் நிரப்பும் வகையில் பயணப் பாதையை மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இண்டிகோ (IndiGo) நிறுவனமும் பல சர்வதேச விமானப் பயணங்களைப் பாதிக்கும் வகையில் கால அட்டவணை மாற்றங்கள் மற்றும் ரத்துகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கத்தார் ஏர்வேஸ் 2026 ஜூன் 30 ஆம் திகதி வரை தெஹ்ரானுக்கான பெரும்பாலான விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளதுடன்,
அங்கு ஒரு நாளைக்கு ஒரு விமான சேவை மட்டுமே இரு திசைகளிலும் இயக்கப்படுகிறது. ஃப்ளைதுபாய் (flydubai) நிறுவனம் இஸ்ரேலுக்கும் தெஹ்ரான் உள்ளிட்ட ஈரானிய நகரங்களுக்கும் செல்லும் விமான சேவைகளை முழுமையாக நிறுத்தியுள்ளதுடன், மற்ற பயணப் பாதைகளை மாற்றியமைத்துள்ளது. துருக்கியின் குறைந்த கட்டண விமான சேவையான ஏஜெட் (AJet) திங்கட்கிழமை வரை ஈரான், ஈராக் மற்றும் ஜோர்தான் ஆகிய இடங்களுக்கான சேவைகளை இடைநிறுத்தியுள்ளதுடன், சில சமயங்களில் அது லெபனனுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. குவைத் விமான சேவை அதிகாரசபையின்படி, குவைத் ஏர்வேஸ் நிறுவனமும் மறு அறிவித்தல் வரும் வரை ஈரானுக்கான அனைத்து விமானப் பயணங்களையும் இடைநிறுத்தியுள்ளது. இஸ்ரேலிய வான்வெளி மூடப்பட்டதன் காரணமாக ஆர்க்கியா (Arkia) மற்றும் ஏர் ஹைஃபா (Air Haifa) போன்ற அந்நாட்டு உள்நாட்டு விமான சேவைகளும் தமது சேவைகளை முழுமையாக இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எமிரேட்ஸ், ஏர் பிரான்ஸ்-கே.எல்.எம் குழுமம் மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் போன்ற பிற நிறுவனங்களும் இந்த ஆபத்தான பகுதிகளைத் தவிர்ப்பதற்காக ஏற்கனவே தங்கள் விமானங்களைத் திருப்பி அழைத்துக் கொண்டோ அல்லது பயணப் பாதைகளை மாற்றியமைத்துக் கொண்டோ இருக்கின்றன. நிலைமை மோசமடைந்தால் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம். தற்போதுள்ள இந்த நிலையற்ற சூழ்நிலை மிக வேகமாக மாறி வருவதால், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விமான நிறுவனங்கள் எதிர்காலத்தில் புதிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. இப்பகுதி வழியாக அல்லது அந்த நாடுகளுக்குப் பயணிக்க விரும்பும் பயணிகள் விமானப் பயண தாமதங்கள் மற்றும் ரத்துகள் குறித்த கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், Flightradar24 போன்ற விமானப் பயண கண்காணிப்பு செயலிகள் அல்லது சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது செயலிகள் மூலம் தங்கள் விமானப் பயணம் குறித்த சமீபத்திய தகவல்களைப் பரிசோதிப்பது பயணிகளுக்கு அத்தியாவசியமானது.