அளுத்கம களுவாமோதரவில் உள்ள ஒரு நட்சத்திர சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு ஜேர்மனியர் கடலில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஜேர்மனியின் ட்ரிவன் போலண்டில் வசித்து வந்ததும், குறுகிய விடுமுறைக்காக அளுத்கம வந்திருந்த ஹுன்க் ஃபிரெட் ஹினர் (74) என்ற ஓய்வுபெற்ற வெளிநாட்டு பிரஜையாவார்.
இந்த வெளிநாட்டு பிரஜை தனது மனைவியுடன் சுற்றுலா விசாவில் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி நாட்டிற்கு வந்துள்ளார். அச்சமயத்தில் கடற்கரையில் இருந்த வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து நீரில் மூழ்கிய ஜேர்மனியரை வெளியே எடுத்து பேருவளை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் உயிரிழந்துள்ளார். பேருவளை திடீர் மரண விசாரணை அதிகாரி ரெஜினோல்ட் ஹெட்டியாராச்சி, அளுத்கம பொலிஸ் அதிகாரிகள், உயிரிழந்த வெளிநாட்டவரின் மனைவி மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் சிலருடன் பேருவளை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தின் ஆரம்ப மரண விசாரணையை மேற்கொண்டு, பின்னர், இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதரகத்திற்கு அறிவிக்கும் வரை பிரேத பரிசோதனைக்காக சடலத்தை களுத்துறை நாகொட வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்குமாறு மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.