குடும்பத்தினருடன் இந்நாட்டுக்கு சுற்றுலா வந்துகொண்டிருந்த 16 வயது சீன சிறுமிக்கு விமானத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு சீனப் பயணி, நேற்று முன்தினம் (18) இரவு சீதுவ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய சீன சுற்றுலா முகவர் ஆவார். அவர் அதே விமானத்தில் பயணித்துள்ளார், மலேசியாவிலிருந்து இலங்கைக்கு பறந்து வந்த விமானத்தில் இந்த பாரதூரமான துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானத்தில் நடந்த இந்த மனிதாபிமானமற்ற சம்பவம், சிறுமி கண்டி பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றபோது தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் கண்டி சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த பொலிஸார் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபரான சீனப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். பாரதூரமான துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகக் கூறப்படும் 16 வயது சீன சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.