பாராளுமன்ற செயலாளரை நீக்க சதி உள்ளது - ஹர்ஷண

there-is-a-conspiracy-to-remove-the-secretary-general-of-parliament---harshana

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய செயலாளர் நாயகத்தையும் அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான சதித்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் தொடர்பான நேற்று (17) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.




பாராளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன ஏற்கனவே பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக செயலாளர் நாயகத்தை நீக்குவதற்கு தயார்ப்படுத்தல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமிந்த குலரத்ன தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் இறுதிப் பந்தியில், அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைக்கு முரணாக அவரை நியமித்தமை மற்றும் அதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு ஆகிய காரணங்களின் அடிப்படையில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் கே.ஏ. ரோஹணதீரவை தற்போது வகிக்கும் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி, அவர் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் மீது அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அத்துடன் தற்போது பாராளுமன்றத்திலும் தலையிட்டு 'பெலவத்த' விரும்பியபடி நாட்டை வழிநடத்த முயற்சிப்பதாகவும் ராஜகருணா கடுமையாக குற்றம் சாட்டினார். சபாநாயகர் பெலவத்த விரும்பியபடி செயல்பட நியமிக்கப்பட்டுள்ளாரா என்று கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர், சுயாதீன நிறுவனங்களில் தலையிடுவதை நிறுத்தி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், மேலும் அரசாங்கத்தின் இந்த தலையீடுகளுக்கு எதிர்க்கட்சியாக ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post