போக்குவரத்துத் துறையில் ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி ஒரு விசேட ஒழுங்குமுறை வேலைத்திட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முக்கியமாக முச்சக்கர வண்டிகள், வாடகை வாகனங்கள் (டாக்ஸிகள்), பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் ஆகிய நான்கு பிரிவுகளுக்கு இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்தத் துறைகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படாததால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினரும், சேவையைப் பெறும் பெற்றோர்கள் உட்பட பொதுமக்களும் பல பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தற்போது முச்சக்கர வண்டி சாரதிகளைக் கட்டுப்படுத்தும் பணி பெரும்பாலும் பொலிஸாரால் அல்லது சில மாகாண சபைகளால் மேற்கொள்ளப்பட்டாலும், அது முறையான ஒருங்கிணைந்த ஒழுங்குமுறையாகச் செயற்படவில்லை. இந்த நிலையைச் சரிசெய்வதற்காக, மேலே குறிப்பிடப்பட்ட நான்கு போக்குவரத்துப் பிரிவுகளுக்கும் பொருந்தக்கூடிய புதிய விதிமுறைகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட தொழில்முறை குழுக்கள் மற்றும் சங்கங்களுடன் இறுதிச் சுற்று கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் இந்த ஒழுங்குமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ள சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய விசேட நடமாடும் பரிசோதனை ஆய்வகப் பேருந்துகளைப் பயன்படுத்தி பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் ஆய்வகங்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது, தற்போது போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர்கள் ஈடுபட்டுள்ள தொழில்களில் சாரதித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த ஆபத்தான நிலையை கட்டுப்படுத்த போக்குவரத்து அதிகாரிகள் இலங்கை சத்திரசிகிச்சை நிபுணர்கள் கல்லூரியுடன் (College of Surgeons) இணைந்து செயற்பட்டு வருகின்றனர். போதைப்பொருள் அல்லது மதுபானம் பயன்படுத்தி வாகனம் ஓட்டும்போது, ஒரு சாரதியால் சரியான முடிவுகளை எடுக்கவோ அல்லது உடனடியாக செயல்படவோ முடியாது என்றும், இது பாரதூரமான விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்றும் நிபுணத்துவ மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.