வீட்டு வாடகைச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் மற்றும் முன்மொழியப்பட்ட குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று (03) முதல் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதுள்ள வாடகைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டத்தின் மூலம் வீடுகளை வாடகைக்கு விடும் நபர்களுக்கோ அல்லது வீடுகளை வாடகைக்கு விடுவதை ஒரு தொழிலாக நடத்தும் எந்தவொரு தரப்பினருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அமைச்சர் அங்கு வலியுறுத்தினார்.
நிபுணர் குழுவொன்றினால் முறையான வழிமுறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு சட்டமூலங்களும் கடந்த 2025 செப்டம்பர் 18 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதுடன், அதன் பின்னர் பல மாதங்களாக மும்மொழிகளிலும் பத்திரிகை மற்றும் இணையத்தள விளம்பரங்களை வெளியிட்டு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹர்ஷண நானாயக்கார சுட்டிக்காட்டினார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைத்து இந்த சட்டமூலங்களை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் கோரியதால், அரசாங்கம் இரகசியமாக சட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என்றும், அந்தக் கோரிக்கையை பரிசீலித்து இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்த புதிய சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் வீட்டு உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் சட்டபூர்வமான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி இரு தரப்பினரின் உரிமைகளையும் பாதுகாப்பதாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார். பல சந்தர்ப்பங்களில் சட்டத்தின் முன் வீட்டு உரிமையாளர்கள் நிராதரவாகிவிடும் சந்தர்ப்பங்களும் குத்தகைதாரர்கள் அநீதிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதால் அந்த இரண்டு தரப்பினரையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஒப்பந்தக் காலப்பகுதியில் குத்தகைதாரர்களை வெளியேற்றும் நோக்குடன் நீர் அல்லது மின்சாரத்தை துண்டிப்பது போன்ற தொந்தரவுகளைச் செய்ய எந்தவொரு தரப்பினருக்கும் இந்தச் சட்டம் இடமளிக்காது என்றும், அவ்வாறு நடக்கும் சந்தர்ப்பங்களில் குத்தகைதாரர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் நீதியைப் பெற முடியும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். இந்தச் சட்டம் இரு தரப்பினருக்கும் இடையில் உள்ள எழுத்துமூல ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே அமுல்படுத்தப்படும் என்றும், ஒப்பந்தத்திற்கு வெளியே நடக்கும் விடயங்களைக் கட்டுப்படுத்த பொதுச் சட்டம் பொருந்தும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் விளக்கினார்.