பாணந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள லைசியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவன் ஒருவன், பாடசாலைக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்ததன் காரணமாக பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த விபத்துக்குள்ளானவன் அந்தப் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனாவான்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் வழங்கப்பட்ட அறிவுரை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் மாணவன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 03ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற கண்காட்சி தொடர்பில் குறித்த மாணவன் செய்த ஒரு கருத்து (Comment) காரணமாகவே ஆசிரியர் இந்த அறிவுரையை வழங்கியதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன் திடீரென ஓடிச் சென்று கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த மாணவன் ஆரம்ப சிகிச்சைகளுக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான். அங்கு மாணவனின் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சத்திரசிகிச்சை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரும், பாணந்துறை கோட்ட குற்றவியல் தடயவியல் ஆய்வக அதிகாரிகளும் இணைந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.