கெலனிய, வராகொட வீதிப் பிரதேசத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஒருவருக்கு வாளைக் காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்து, 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்த இரு சந்தேக நபர்களை கட்டான பொலிஸார் நேற்று (6) மீரிகம பிரதேசத்தில் கைது செய்தனர். கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய இந்த இரு சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தைச் சந்தித்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கெலனிய, நாரம்மினிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 4ஆம் திகதி வராகொட வீதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவருக்கு இடையூறு விளைவித்துள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவர் வாளுடன் அவரை நோக்கி வந்தபோது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பயந்து தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்துள்ளார். அவ்வாறு கீழே விழுந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் வாளைக் காட்டி மரண அச்சுறுத்தல் விடுத்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பேலியகொட தலைமையகப் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், அப்பகுதியின் பாதுகாப்பு கமரா காட்சிகளை அவதானித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக ஜா-எல, பமுணுகம மற்றும் கட்டான உள்ளிட்ட பல பிரதேசங்களில் சங்கிலி கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சுமார் ஆறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேல் மாகாண வடக்குக்கான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காலிங்க ஜயசிங்க மற்றும் கெலனிய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், கெலனிய பிரிவு I க்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பேலியகொட தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் பிரதீப் குமார மற்றும் கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த சுதசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.