புஸ்ஸெல்லாவத்த, களுவில, ரதாவான பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த முன்தினம் (25) இரவு நாற்பது வயதுடைய திருமணமான ஒருவர் கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக மல்வத்து மற்றும் ஹிரிப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். அளுத்கம கிராமப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலந்த விஜேசூரிய (40) என்ற திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் பலத்த காயங்களுடன் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சந்தேகநபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்தத் தொடர்பு கையும் களவுமாகப் பிடிபட்ட பின்னர், சந்தேகநபர் நுட்பமாக மதுபானம் கொடுத்து ஏமாற்றி இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, கொலை செய்யப்பட்டவருடன் நட்பு வைத்திருந்த பெண்ணின் கணவரான நாற்பத்தைந்து வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகள் மற்றும் மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, வெளியூர் சென்று வேலை செய்து கொண்டிருந்த சந்தேகநபரான கணவன் சம்பவம் நடந்த அன்று வீட்டிற்கு வந்தபோது, உயிரிழந்தவரும் அந்த வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பிறகு தூங்கிக் கொண்டிருந்தபோது கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று (26) கம்பஹா வைத்தியசாலையில் நடத்தப்படவிருந்தது.