ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையில் நடைபெறும் ஸ்ரீ சர்வக்ஞ தாது வணக்க நிகழ்விற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக இலங்கை புகையிரத திணைக்களம் விசேட புகையிரத சேவையை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த விசேட புகையிரத சேவை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
களனிவெளி மார்க்கத்தில் அவிசாவளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இயக்கப்படும் விசேட புகையிரதம் மாலை 07.15 மணிக்கு அவிசாவளை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 09.56 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். மீண்டும் திரும்பும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 01.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03.37 மணிக்கு அவிசாவளை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
பிரதான மார்க்கத்தில் ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் விசேட புகையிரதம் மாலை 06.30 மணிக்கு ரம்புக்கனையிலிருந்து புறப்பட்டு இரவு 08.51 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும். அதே புகையிரதம் மீண்டும் அதிகாலை 01.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03.15 மணிக்கு ரம்புக்கனை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
கடலோர மார்க்கத்தில் அளுத்கமையிலிருந்து மருதானை வரை இயக்கப்படும் விசேட புகையிரதம் மாலை 07.10 மணிக்கு அளுத்கமை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 08.57 மணிக்கு மருதானை புகையிரத நிலையத்தை வந்தடையும். மீண்டும் மருதானை புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 02.00 மணிக்கு புறப்படும் அதே புகையிரதம் அதிகாலை 03.47 மணிக்கு அளுத்கமையை வந்தடையும் என புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.