இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று காலை 10.15 மணியளவில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்தார். 'கெஹெல்பத்தரை பத்மே' எனப்படும் பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினருடன் பேணப்பட்டதாகக் கூறப்படும் தொடர்புகள் மற்றும் சில நிதி முறைகேடுகள் குறித்து மேற்கொள்ளப்படும் விரிவான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு திணைக்களத்தில் முன்னிலையானார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அந்த சந்தர்ப்பத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால், அதில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்திருந்ததுடன், அதற்கு வேறு ஒரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இன்றைய தினம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி அம்மையார் ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்று காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு (FCID) வருகை தந்தார். 'சிரிலிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.