பிரபலமான நடிகர் ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்படும் விசாரணைக்காகவே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இச்சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஹேவ்லாக் சிட்டி வர்த்தக வளாகத்தில் பதிவாகியிருந்ததுடன், சமூக ஊடக ஆர்வலர் ஒருவரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸில் ஆஜராகுமாறு நடிகர் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், அந்த அறிவிப்புகளைத் தவிர்த்து அவர் பொலிஸில் ஆஜராவதை தாமதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இன்று (03) அவர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்த பின்னர், சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது தொடர்பில் வினவியபோது, பொலிஸ் ஊடகப் பிரிவும் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் ஒரு ஊடகவியலாளர் அல்லது சமூக ஊடக ஆர்வலர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஹேமால் ரணசிங்க கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.