முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணையொன்றுக்கு வாக்குமூலம் பெறுவதற்காக அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 20ஆம் திகதி குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்காக அந்தப் பிரிவுக்கு வருமாறு அறிவித்து கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸார் ஊடாக அவருக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக சர்ச்சைக்குரிய பிரித்தானிய பயணத்தின் போது ஏதேனும் நிதி மோசடி குற்றம் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து கண்டறியும் வகையில் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிக்கையிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பான பிணை உத்தரவை அறிவிப்பதற்காக வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டிலீப பீரிஸ் இந்த விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.