ரூபா 1.5 கோடி அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது.
கடந்த 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி செயலாளர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார். சந்தேகநபருக்காக முன்வைக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கோட்டை நீதவான், தலா 20 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதியின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்காக மேற்கொண்ட தனிப்பட்ட லண்டன் பயணத்தின் போது அரசாங்கத்திற்கு ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சமன் ஏக்கநாயக்க இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மாகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமன் ஏக்கநாயக்கவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார். தான் பொதுவாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை என்றும், ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்றது தற்போதைய நிலைமை குறித்த தனது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதற்காகவே என்றும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். சமன் ஏக்கநாயக்க ஒரு நல்ல மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி என்றும், தான் அவருடன் மிக நெருக்கமாகப் பழகியதாகவும், ஒரு நாட்டை நடத்துவதற்கு நிர்வாக சேவையில் இத்தகைய அனுபவமிக்க அதிகாரிகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவர் சமன் ஏக்கநாயக்கவை சந்தித்த சிறிது நேரத்திற்குப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.