தித்வா சூறாவளியால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிடும் நோக்குடன், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா நாளை (16) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என அந்த நிதியம் தெரிவித்துள்ளது.
அவரது இந்த விஜயத்தின் போது, ஜோர்ஜியேவா அம்மையார் நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை சந்தித்து கலந்துரையாடுவார் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜோர்ஜியேவா அம்மையார் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார். அங்கு, இலங்கை மக்களுக்கு ஒரு வலுவான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் இயல்பு நிலையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் சர்வதேச நாணய நிதியம் வழங்கக்கூடிய ஆதரவு குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என அந்த நிதியம் மேலும் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், தித்வா சூறாவளி நாட்டை பாதித்ததை அடுத்து, சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதித் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளப்படவிருந்த ஐந்தாவது மதிப்பாய்வை நிறைவு செய்வதை தாமதப்படுத்தவும் அந்த நிதியம் நடவடிக்கை எடுத்தது.