
சிங்கராஜ வனப்பாதுகாப்புப் பகுதியில் மான் ஒன்றைக் கொன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியும் பொலிஸ் கான்ஸ்டபிளும் பிணையில் விடுவிக்க எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க எம்பிலிபிட்டிய பதில் நீதவான் டி.எஸ்.பி. தசனாயக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வனவிலங்கு கட்டளைச் சட்டத்தை மீறி ஒரு விலங்கை வேட்டையாடிய குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCD) விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர், இந்த இரண்டு அதிகாரிகளும் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கடந்த நாட்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நடமாடும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. பொலிஸ் அதிகாரிகள் வனவிலங்குகளை வேட்டையாடச் சென்றதாக அப்பகுதி மக்கள் அப்போது குற்றம் சாட்டினர்.
எவ்வாறாயினும், சூரியகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காபேரியா தோட்டத்தில் வேட்டைக்காரர்கள் குழு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பொறுப்பதிகாரி உட்பட ஒரு குழுவினர் சுற்றிவளைப்புக்குச் சென்றதாகவும், அப்போது உண்மையான சந்தேக நபர்கள் துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றிவளைப்புக்குப் பிறகு, தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் விட்டுச் சென்ற துப்பாக்கியுடன் பொலிஸ் அதிகாரிகள் திரும்பி வரும் காட்சியை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன், சூரியகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். மேலும், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசியல்வாதிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்த சம்பவத்திலும் இவர் முக்கிய பங்காற்றிய அதிகாரி என்று பொலிஸார் தெரிவித்தனர்.