2026 இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றுப் போட்டியின் கீழ் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிக்கு மத்தியில் இரு அணி ரசிகர்களுக்கிடையே கடும் பதற்றமான நிலை ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிக் காட்சிகளின்படி, சௌத் என்ற பாகிஸ்தான் ஆதரவாளருக்கும் இங்கிலாந்து ரசிகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கடுமையான உடல் ரீதியான மோதலாக மாறியுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த, போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சில உள்ளூர் இலங்கை ரசிகர்களும் தலையிட்டு இரு தரப்பினரையும் பிரிக்க வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.அவுஸ்திரேலிய சமூக ஊடக ஆர்வலர் ஜேக் ஜென்னிங்ஸ் இந்த மோதலின் காணொளியை இணையத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பலரின் கவனம் ஈர்க்கப்பட்டது. இந்தத் தொடரில் இதற்கு முன்னரும் குறித்த பாகிஸ்தான் ரசிகரை தான் சந்தித்ததாகக் கூறும் ஜென்னிங்ஸ், அவர் தொடர்ந்து இதுபோன்ற மோதல்களை ஏற்படுத்தும் ஒரு நபர் என்று குற்றம் சாட்டி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) கோரினார். இருப்பினும், சௌத் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார், இங்கிலாந்து ஆதரவாளர்கள் முதலில் தன்னை அணுகி தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் தன் மீது பீர் வீசியதால் இந்த மோதல் தொடங்கியது என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், போட்டி அதிகாரிகள் இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் தொடங்கிய போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை எடுக்க முடிந்தது. சிறப்பான இன்னிங்ஸை ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா பர்ஹான் 45 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்றார், ஓட்ட வேகத்தை அதிகரிக்க சிரமப்பட்ட தலைவர் பாபர் அசாம் 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பக்கர் சமான் மற்றும் ஷதாப் கான் ஆகியோரும் பாகிஸ்தான் இன்னிங்ஸிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர், பந்துவீச்சில் இங்கிலாந்தின் லியாம் டாவ்சன் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணியால் வெற்றிகரமான ஆரம்பத்தைப் பெற முடியவில்லை. ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பில் சால்ட் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், அத்துடன் நிற்காத அப்ரிடி, அதிக நேரம் செல்லுமுன் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிந்தது.
இருப்பினும், 3ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இங்கிலாந்து தலைவர் ஹரி புரூக் 51 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்று தனது முதல் இருபதுக்கு20 சர்வதேச சதத்தைப் பதிவு செய்து சிறப்பான இன்னிங்ஸை ஆடினார். ஆண்கள் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டியில் சதம் அடித்த முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்று அவர் தனி ஒருவராக இங்கிலாந்து அணியை மீண்டும் வெற்றிக்கு இட்டுச் சென்றார், இறுதியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அப்ரிடியின் யார்க்கர் பந்தில் புரூக் ஆட்டமிழந்தார்.
இன்னிங்ஸின் இறுதிப் பகுதியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் சிலரின் பொறுப்பற்ற ஆட்டமிழப்புகளால் போட்டியின் இறுதி ஓவர் வரை கடும் பரபரப்பு காணப்பட்டது. இறுதி ஓவரில் 2 விக்கெட்டுகள் கையில் இருக்க வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு பவுண்டரி அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். அதன்படி, 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து 5 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியின் முடிவோடு, இந்தத் தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் அணியாக இங்கிலாந்து மாறியது, பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புகள் மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, தொடரில் நீடிப்பதற்கு அவர்கள் அடுத்ததாக நடைபெறும் அவர்களின் இறுதி சுப்பர் 8 சுற்றுப் போட்டியை வெல்வது கட்டாயமாகியுள்ளது.