சமூக ஊடகப் பதிவுக்காக இளைஞர் ஒருவரைக் கைது செய்த தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 20 இலட்சம் ரூபாய் அபராதம்

a-fine-of-20-lakhs-was-imposed-on-the-dehiwala-police-station-chief-who-arrested-a-young-man-for-a-social-media-post

இஸ்ரேலிய தேசியக் கொடியை எரிப்பதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுராத ஹேரத், சம்பந்தப்பட்ட இளைஞரிடம் மன்னிப்பு கோரினார். அத்துடன், அநீதி இழைக்கப்பட்ட இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக இருபது இலட்சம் ரூபாய் நட்டஈட்டுத் தொகையையும் பொறுப்பதிகாரி திறந்த நீதிமன்றத்திலேயே அவருக்கு வழங்கினார்.




பாதிக்கப்பட்ட கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியரான மொஹமட் ரிசான் மொஹமட் என்ற இளைஞரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டது. தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுராத ஹேரத், பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயதுங்க மற்றும் கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிராமணகே ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் திகதி மாவனல்லை பிரதேசத்தில் பிரதிவாதி பொலிஸ் அதிகாரிகளால் இந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதன்பின்னர் கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், பின்னர் சட்டமா அதிபரின் தலையீட்டின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.




பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், அதற்காக தனக்கு நட்டஈட்டுத் தொகை வழங்குமாறும் மனுதாரர் தனது மனுவில் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் இளைஞர் சார்பில் சட்டத்தரணி இல்ஃபான் ஹசன் அலி அவர்களின் ஆலோசனையின் பேரில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஷாப் ஹிஸ்புல்லா ஆஜரானார், பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றத்தில் வாதங்களை ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post