
நேற்று (21) நடைமுறைக்கு வந்த பாரிய எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாத காரணத்தினால், இன்று (22) நாட்டின் தனியார் பஸ்களில் சுமார் 90% வீதமானவை சேவைகளில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளதாவது, நேற்று ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு நாட்டின் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த சதவீத விலை அதிகரிப்பு ஆகும். இந்த புதிய எரிபொருள் விலைகள் மற்றும் அதிக செலவுகள் காரணமாக, தற்போதுள்ள பழைய பயணச்சீட்டு கட்டணங்களின் கீழ் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதால் பஸ் தொழிலுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று பஸ் உரிமையாளர்கள் சங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, இன்று தங்கள் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப் போவதில்லை என்று உரிமையாளர்கள் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தலைவர் குறிப்பிட்டார். அதன்படி, அதிகரித்த எரிபொருள் விலைக்கு ஏற்றவாறு விரைவான புதிய பஸ் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே மீண்டும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.