ரத்மலே பிரதேசத்தில் மின்னேரியா குளத்திலிருந்து கௌடுல்ல குளத்திற்கு நீர் கொண்டு செல்லும் ஒரு வாய்க்காலில் ஐம்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் நேற்று (30) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மின்னேரியா, மகாரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த பெண் முன்தினம் காலை குளிக்கச் செல்வதாக கூறி தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். நீண்ட நேரம் கடந்தும் அவர் மீண்டும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த வீட்டு உறுப்பினர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து அவர் குளிக்கச் சென்றதாக கூறப்படும் வாய்க்கால் பகுதியை தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் முன்தினம் மாலை வரை அவரைப் பற்றிய எந்த தடயத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், நேற்று காலை ரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது பயிர்ச்செய்கைக்கு நீர் மோட்டார் மூலம் நீர் பெறுவதற்காக இந்த வாய்க்காலில் இறங்கியபோது அங்கு ஒரு மரத்திற்கு அருகில் மிதந்து கொண்டிருந்த குறித்த சடலத்தைக் கண்டார். பின்னர் அவர் இது குறித்து பிரதேசவாசிகளுக்கும் மின்னேரியா பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். அதன்படி உடனடியாக செயற்பட்ட மின்னேரியா பொலிஸ் உயிர் பாதுகாப்பு அதிகாரிகள், பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என தற்போது ஊகிக்கப்படுவதுடன், சரியான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மின்னேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிட்டிகலவின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் ஹேரத் அவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.