ஒரு பொலிஸ் நிலையத்தினுள் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி, பொலிஸ் ஆவணங்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் இருபத்தைந்து வயதுடைய யுவதி ஒருவர் பொத்தபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி மாலை கண்டி, பொத்தபிட்டிய பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மோதலுக்கு ஒரு காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக அமைந்துள்ளது. சந்தேகநபரான யுவதி தன்னுடன் உறவில் இருக்கும்போதே மற்றொரு இளைஞனுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டதாக அவரது காதலன் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அந்த முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட யுவதியையும் முறைப்பாட்டாளரான காதலனையும் அன்றைய தினம் மாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்.
பொலிஸ் நிலையத்திற்கு வந்த யுவதி விசாரணையின் போது அங்கிருந்து வெளியேறி சிறிது நேரத்தில் மீண்டும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு வந்துள்ளார். அப்போது சம்பந்தப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் அவருக்கு விடயங்களை புரியவைத்து அறிவுரை வழங்க முயற்சித்தபோது சந்தேகநபர் கடுமையாக கோபமடைந்துள்ளார். அதன்பின் தனது காதலனையும் கடுமையாக திட்டி, அவர் பொலிஸ் மேசையில் இருந்த முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் புத்தகங்களைப் பிடுங்கி தரையில் வீசிவிட்டு மிகவும் சண்டையிடும் விதமாக நடந்துகொண்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற கான்ஸ்டபிளின் கூந்தலைப் பிடித்து இழுத்த இந்த யுவதி, தனது நகங்களால் கீறி அவரது கைகளுக்கும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார். ஒரு அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல், குற்றவியல் ரீதியான பலவந்தம் செய்தல், காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் சண்டையிடும் விதமாக நடந்துகொள்ளுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரான யுவதியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.