மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகளை ஏற்றிச் சென்ற விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள், ஃபிட்ஸ் ஏர் விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் 133 பயணிகளுடன் வந்ததாகத் தெரிவித்தன.
இதற்கிடையில், ஓமானின் மஸ்கட்டில் இருந்து மற்றொரு விமானமும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் மோதல்கள் தொடங்கியதால் இடைநிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் நேற்று (20) மாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஃபிட்ஸ் ஏர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் நேற்று பிற்பகல் 1.20 மணிக்கு 47 பயணிகளுடனும் 10 விமான ஊழியர்களுடனும் துபாய் நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.