சவப்பெட்டி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி தங்க நகைகளை திருட முயற்சி செய்துள்ளனர்

they-tried-to-dig-up-the-place-where-the-coffin-was-buried-and-steal-the-gold

இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தில் அணிந்திருந்த நகைகளை திருடும் நோக்குடன் அவரது கல்லறையை தோண்டிக் கொண்டிருந்த இருவரைக் கைது செய்ய மொரட்டுவ தலைமையகப் பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மொரட்டுவ, லக்ஷபதிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.




முறைப்பாட்டாளர் தனது தாயின் மரணத்திற்குப் பிறகு, சடலத்திற்கு ஒரு போலி (இமிடேஷன்) சங்கிலி, ஒரு ஜோடி காதணிகள் மற்றும் சில வளையல்களை அணிவித்து அடக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தாயின் மரணத்திற்கு ஏழு நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கல்லறைக்கு அருகில் மெழுகுவர்த்தி ஏற்ற அவர் மயானத்திற்குச் சென்றபோது, இருவர் கல்லறையை தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டார், முறைப்பாட்டாளர் கண்டவுடன் அந்த இரு சந்தேக நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த பெண்ணின் சடலம் மிகவும் விலையுயர்ந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மயானத்தில் கடமையாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஏற்கனவே பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார், தப்பிச் சென்ற மற்ற இரு சந்தேக நபர்களும் மொரட்டுவ மாநகர சபையின் ஊழியர்கள் என பொலிஸார் பலமாக சந்தேகிக்கின்றனர்.




இவ்வாறு கைது செய்யப்பட்ட மயான பாதுகாப்பு அதிகாரி மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் மொரட்டுவ தலைமையகப் பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் தலைமையிலான அதிகாரிகளின் குழுவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post