முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டவிரோத பணச் சம்பாத்தியம் தொடர்பான வழக்கில் முக்கிய சாட்சியாகப் பெயரிடப்பட்டிருந்த அவரது நெருங்கிய உறவினர் சகோதரர் ஒருவர் ரத்னபுர, ஹிதெல்லன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னாள் அமைச்சர் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் 748 மில்லியன் ரூபாய் பணத்தை சட்டபூர்வமாக்க உதவியதாகவும், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், உயிரிழந்தவர் இதற்கு முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த பெப்ரவரி 03 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு, அவருக்கு பெப்ரவரி 10 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது. அன்றிலிருந்து அவர் கடுமையான மன அழுத்தத்திலும் விரக்தியிலும் இருந்ததாகவும், சட்டத்தை மதிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்த தான் ஒரு அரசியல் வழக்கில் சிக்கியமை குறித்து மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாகவும் அவரது நெருங்கிய உறவினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், கடந்த 4 ஆம் திகதி அதிகாலையில் அவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள வெரளு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட அவமானத்தையும் மன உளைச்சலையும் தாங்க முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.