ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவும் சந்தேகிக்கப்படும் 'தெமட்டகொட ருவன்' என்பவருக்கு நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொடுக்க உதவிய குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று (23) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அவர், சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 10.00 மணியளவில் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார். சுமார் நான்கு மணிநேர விசாரணையின் பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
தெமட்டகொட ருவன் என்பவருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக ஒன்றரை கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா கடமையாற்றிய காலத்தில் அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதி பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு ஏற்கனவே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம் முன்னிலையில் தகவல்களை சமர்ப்பித்திருந்தது. அதன்படி, இந்த முறைப்பாட்டின் இரண்டாவது சந்தேக நபராக ஆர். துமிந்த சில்வாவை பெயரிட ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் இரகசியப் பொலிஸ் ஊடாக தெமட்டகொட ருவன் கைது செய்யப்பட்டபோது, அவரது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், ருவனுக்கு பிணை பெற்றுக்கொடுக்கவும் அவரது மகன் தரிந்து முயற்சித்துள்ளார். அப்போது அவர் துமிந்த சில்வாவை சந்தித்ததாகவும், பிணை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மொஹமட் மொஹிதீன் சப்ராஸ் நவாஸ் என்பவரை சந்திக்குமாறு துமிந்த சில்வா அங்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சப்ராஸ் நவாஸ் என்ற சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் ஊடாக ஐம்பது இலட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், ஒரு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேக நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், முறைப்பாட்டாளருக்கு ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக அது வாபஸ் பெறப்பட்டுள்ளதுடன், பின்னர் இலஞ்ச ஆணைக்குழு தனது சுயாதீன விசாரணைகள் மூலம் இந்த விடயங்களை உறுதிப்படுத்தி சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.
துமிந்த சில்வா சுமார் நான்கு மணிநேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.